17 ஆவது மக்களவைக்கான தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் அதிகளவு வாக்குப்பதிவை திரிபுரா (81.8%) மாநிலம் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவின் 17 தொகுதிகள், உத்திரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிலும், அசாம் மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகளிலும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.


காஷ்மீர், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது. சத்தீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி மட்டுமே உள்ள நிலையில், அங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.


இவ்வாறு, ஆயிரத்து 279 வேட்பாளர்களுடன் முதற்கட்ட தேர்தல் எதிர்கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளில், வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில தொகுதிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிவுற்றது.


மொத்தம் 1,279 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இந்த முதல் கட்ட தேர்தலில் முடிவு செய்யப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 14 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக 1 லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மின்னணு ஓட்டு எந்திரங்களும், வாக்குப்பதிவை உறுதி செய்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘வி.வி.பாட்’ எந்திரங்களும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.


இந்நிலையில் நேற்று  நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிகளவு வாக்குப்பதிவை திரிபுரா (81.8%) மாநிலம் பெற்றுள்ளது. பீகார் மாநிலம் 50 சதவீத வாக்காளர்களுடன் குறைந்த வாக்களிப்பு பதிவு செய்தது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்தமான் நிகோபார் தீவில் 70.67 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவில் 66 சதவீதம், தெலுங்கானாவில் 60 சதவீதம், உத்தரகண்ட் மாநிலத்தில் 57.85 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 58 சதவீதமும், சிக்கிமில் 69 சதவீதமும், மிசோரமில் 60 சதவீதமும், நாகலாந்தில் 78 சதவீதமும், மணிப்பூரில் 78.2 சதவீதமும், அசாமில் 68 சதவீதமும். உத்தரபிரதேசத்தில் 63.69 சதவீத வாக்குகள் பதிவாகின. 


முதல் கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில், தமிழகம், புதுவை, கர்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங் களில் 97 நாடாளுமன்ற தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் 18ம் தேதி நடக்கிறது.