நீங்கள் டீக்காரர் என்றால், நாங்கள் பால்காரர்: வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் யாதவ்
இன்று அசம்கார் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அசம்கர்: 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி கட்சியும், பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ராவும் இருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தபிறகு மோடி மற்றும் யோகி அரசாங்கத்தை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். உத்தரபிரதேச மாநிலத்திற்காக சமாஜ்வாடி கட்சி செய்த அனைத்து நன்மைகளையும் யோகி அரசாங்கம் கெடுத்துவிட்டது எனக் கூறினார்.
2014 ஆம் ஆண்டில், நீங்கள் தேநீரில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள், ஆனால் அந்த தேநீர் நல்லதாக இல்லை. ஏனெனில் பால் இல்லாமல் தேநீர் நல்லா இருக்காது. அவர்கள் டீக்காரர் என்றால், எனவே நாங்கள் பால்காரர்கள். பால்காரர்கள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறினார்.
அசம்கர் தொகுதிக்கு அடுத்த மாதம் மே 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போஜ்புரி நடிகர் தினேஷ்லால் யாதவ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.