லக்னோ மெட்ரோ ரயில்: இன்று முதல் துவங்கப்பட்டது!
உத்தரபிரதேச மாநில லக்னோ நகரில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
சுமார் 8.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த போக்குவரத்து வசதி சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் இயக்கப்படும்.
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி கொச்சி மெட்ரோ ரயில் துவக்கத்தின்போது தெரிவித்தார்.
முன்னதாக நேற்று லக்னோவில் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக், மாநில அமைச்சரவை மூத்த அமைச்சர்கள், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று முதல் இந்த மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.