காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பலியான கேதான் சர்மாவின் இறுதி சடங்கு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனந்தநாக் மாவட்டத்தில் பிஜிபாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் கேதான் சர்மா வீர மரணம் அடைந்தார். தொடர்ந்து கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது பீஜ்பிஹாராவின் மரஹாமா சங்கம் கிராமத்திற்கு மிக அருகில் துப்பாக்கிசூடு நடைப்பெற்று வருகிறது. இந்த துப்பாக்கிசூடு சம்பவமானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நிகழ்ந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் காவலர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் இணைந்த நடத்தி வரும் இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 3-4 பயங்கரவாதிகள் பிடிப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.



முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வாகனம் பலத்த சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தீவிரவாத தாக்குதலில் வீரர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை. துணை ராணுவ பிரிவான ராஷ்டிரிய ரைபிள்ஸின் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.


துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த சர்மா கடந்த 2012-ஆம் ஆண்டு டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர். புனேயில் இருந்து காஷ்மீருக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டு ஆகிறது. இளம் துடிப்பான அதிகாரி மரணம் ராணுவத்தினருக்கு பேரிழப்பு என சக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.