இடுக்கி: கேரளாவின் (Kerala) இடுக்கி மாவட்டத்தின் ராஜமாலாவில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 80 தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இப்பகுதியில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.


இடுக்கி மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத் தலமான முன்னார் அருகே உள்ள ராஜமாலாவில் (Rajamala) நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்தில் நிலச்சரிவு (Landslide) ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு மூன்று குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகவும் இடுக்கியின் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


முன்னார் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமாலா பகுதியின் வீடியோவை ANI வெளியிட்டது:



“நான்கு தொழிலாளர் முகாம்களில் சுமார் 82 பேர் அங்கு வசித்து வந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. NDRF இன்னும் அந்த இடத்தை எட்டவில்லை. மோசமான வானிலை காரணமாக அங்குள்ள மக்களை விமானம் மூலம் காப்பாற்றுவது இப்போது சாத்தியமில்லை” என்று கேரள வருவாய் அமைச்சர் இ.சந்திரசேகரன் கூறினார்.


ALSO READ: மும்பை கனமழையின் கோரதாண்டவம்: வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் நுழைந்த தண்ணீர்


இதற்கிடையில், ராஜமாலாவில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேசிய பேரிடர் பதில் படை (NDRF) பணியமர்த்தப் பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். "காவல்துறை, தீயணைப்பு, வன மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது" என்று முதல்வர் கூறினார்.


மீட்பு நடவடிக்கைகளுக்காக ராஜமாலாவுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை வழங்க முதலமைச்சர் அலுவலகம் இந்திய விமானப்படையை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கேரளாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அவை கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.


இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆகஸ்ட் 5 ஆம் தேதி இடுக்கி, வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.


ALSO READ: Rain Alert: மும்பையில் கன மழை, போக்குவரத்து ஸ்தம்பித்தது, இயல்பு நிலை பாதிப்பு!!