புது டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்தியில் ஆளும் பாஜக-வை கடுமையாக விமர்சித்து வந்த மம்தா பானர்ஜி இன்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சந்திப்பின் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா, குர்தா மற்றும் இனிப்புக்களை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்தி, தீபாவளி, மோடியின் பிறந்தநாள் போன்ற நாட்களின் போது பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் பெங்காலி இனிப்பு வகைகளை பரிசாக வழங்குவதை மம்தா வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மோடி உடனான சந்திப்பின் போது மேற்குவங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி குறித்து மம்தா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. மோடியை சந்திக்க டெல்லிக்கு புறப்படும் முன், கல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி , மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம்சந்தித்து நலம் விசாரித்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்வதற்காக வந்ததாக, மம்தா பானர்ஜியிடம் யசோதா பென் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றபோதிலும், இது மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவது, பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டது குறித்த சந்திப்பாகவே கருதப்படுகிறது. மற்றொருபுறம் சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, கல்பத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம், சி.பி.ஐ., விசாரிக்க உள்ளது தொடர்பாகவே மம்தா டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பட்சத்தில், மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் பாதி பேர் மற்றும் கட்சியின் பல மூத்த தலைவர்கள், சிறைக்கு செல்வர். அதனால், ராஜிவ் குமாரை காப்பாற்றுவதற்காக கடைசி முயற்சியாக, பிரதமரை மம்தா சந்தித்துள்ளதாகவே கூறப்படுகிறது.