புது டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், கடந்த 10 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காததுதான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஆறாவது நாட்களாக இன்றும் தொடரும் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. 


நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினார். மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளத்தால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி மீண்டும் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள். 


இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஆறாவது நாட்களாக இன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டம் மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியேயும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் நாடு முழுவதும்  மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.


 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், மருத்துவர்களின் போராட்டத்தை கவுரவ பிரச்சனையாக பார்க்காமல் விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் குறித்து மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளேன். மேலும் இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் கூறினார்.