மோடி 2.0 அரசு: கடந்த ஆண்டு அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மன உறுதியே காரணம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாம் ஆட்சிக்காலத்தின் முதல் ஆண்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறிய ஜே.பி நட்டா, இந்த சட்டப்பிரிவுகளை நீக்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பாக மேற்கொண்டார் என்றும் கூறினார்.


370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை ஒழித்ததன் மூலம்  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த அந்தஸ்து அகன்றது. அங்கு வசித்த நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இருந்து வந்த பிரத்யேக உரிமைகளும் முடிவுக்கு வந்தன.


மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க தலைவரிடம், 2024 பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதா என்று கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த ஜே.பி.நட்டா, "நாங்கள் எல்லா நேரத்திலும் அரசியல் செய்ய மாட்டோம், எப்போதுமே மக்களுக்காக உழைக்க விரும்புகிறோம். அரசியல் என்பது தேர்தல்களின் போது மட்டுமே செய்யப்படுகிறது. ஆட்சிக்கு திரும்புவதற்காக நாங்கள் அரசாங்கத்தில் பணியாற்றுவதில்லை.  நமது நாட்டிற்கு சேவை செய்து அதன் மூலமே முன்னேற விரும்புகிறோம்.  இது நமது நாடு, எங்கள் நாடு" என்று தெரிவித்தார்.


முழு உலகமும் நோவல் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தாலும், பிரதமரின் தலைமையில் நாடு நெருக்கடியைக் கையாண்ட விதம், இந்தியாவின் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஜே.பி நட்டா கூறினார்.


தற்சார்பு மற்றும் 'சுதேசி' போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்வதாக பா.ஜ.க தலைவர் கூறினார்.


மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அதன் மோசமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது, கொரோனா வைரஸ் கண்டறிவதற்காக இந்தியாவில் தினசரி 10,000 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  தற்போது அதன் எண்ணிக்கை 1.60 லட்சமாக அதிகரித்து விட்டது என்பதை நட்டா சுட்டிக் காட்டினார். தற்போது, இந்தியாவில் தினசரி 4.5 லட்சம் பிபிஇ கருவிகளும், 58,000 வென்டிலேட்டர்களும்  தயாரிக்கப்படுகின்றன என்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, தனது கட்சியின் இரண்டாம் ஆட்சிக் காலத்தின் முதலாண்டு நிறைவு பற்றி பெருமைபடக் கூறினார்.


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச் செல்வன்)