மோடி அரசு டெல்லியில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது : எம்.எல்.ஏ கைதுக்கு கெஜ்ரிவால் காட்டம்
டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.
எம்.எல்.ஏ மொஹனியா கூறியதாவது:- ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சியை மட்டும் வைத்துக்கொண்டு என் மீது குற்றம் சுமத்தப்டுகிறது. பிரச்சனை நடைபெற்ற இடத்தில் நான் இருக்கவே இல்லை. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. விசாரணைக்கு எனது ஒத்துழைப்பை முழுமையாக அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பதாவது:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களை கைது செய்வது, அவர்கள் மீது பொய்யான வழக்கு பதிவுசெய்வது என மோடி அரசு டெல்லியில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த அமைச்சர் ஒருவரை இடையில் சென்று கைது செய்துள்ளனர். இதன் மூலம் மோடி அரசு மக்களுக்கு சொல்வது என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.