பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார்: ராகுல் குற்றசாட்டு!
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக பேசவில்லை என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் கூச்சல்களுக்கு இடையே பிரதமர் மோடி. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.
இந்திய பிரிவினை முதல் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது மற்றும் காஷ்மீர் பிரச்சனை வரை எல்லாவற்றுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அவர் பிரதமர் என்பதையே மறந்துவிட்டார் என நான் நினைக்கிறேன். அவர் மக்களிடம் இருந்து வரும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார், மக்களுக்கே கேள்விகளை திருப்பி கேட்கிறார்.
ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து அவர் பதில் சொல்லவில்லை. தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்துவது போல, பிரதமர் பேசியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ள பிரதமர் மக்களின் எந்த பிரச்னைகளையும் பற்றி பேசவில்லை.
விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சினையை பற்றி அவர் பேசவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது பற்றி அவர் கருத்து கூறவில்லை. நாங்கள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.