புது டெல்லி: இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனையும் செய்யப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் தமிழகத்தின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களா நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிகை மே 23 காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது. 


நேற்று 542 மக்களவைக்கான இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி 303 தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாஜக கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


மத்தியில் மீண்டும் பாஜக புதிய அரசு அமைக்கவிருக்கும் நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு அமைக்கும் வரை மோடியை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


இந்தநிலையில், இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பாஜக கூட்டணி தலைவர்கள் வருகை தர உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். மேலும் பல புதிய எம்.பி-க்கள் வெற்றி பெற்றுள்ளதால், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது குறித்தும், யாருக்கு எந்த துறை ஒதுக்குவது? கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்? கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மீண்டும் அவர்களுக்கு ஒதுக்குவதா? அல்லது புதிய துறையை ஒதுக்குவதா? புதிய அரசு எப்பொழுது பதவி ஏற்ப்பது? போன்றவற்றைக் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.