மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெருமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை புறநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் 375 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


பலத்த மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மக்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். சாலைகளில் கார்களும் இரு சக்கர வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மின்சார ரயில்கள் தண்டவாளமே தெரியாத நிலையில் மிகவும் குறைந்த அளவுக்கு கவனமாக இயக்கப்படுகின்றன.50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்களும் ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.


மலாட் என்ற புறநகர் பகுதியில் 20 அடி உயர சுவர் இடிந்த சம்பவத்தில் மட்டும் 22 பேர் பலியாகினர். 78 பேர் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் மழையால் அடித்துச் செல்லப்பட்டன. மலாட் சுரங்கப்பாதையில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இரண்டு பேர் கதவைத் திறக்க முடியாமல் மூச்சடைத்து காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாசிக் நகரின் சாத்புரா பகுதியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.


இதே போல புனே நகரில் சிங்காத் கல்லூரியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 6 பேரும், கல்யாண் நகரில் உருது பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேரும் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மகாராஷ்ட்ரா மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.