மும்பையில் இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மும்பை, புனே, நாசிக் உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய மழை நேற்றும் நீடித்ததால், நகரின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரில் மிதக்கின்றன...


ரயில் போக்குவரத்து, கனமழை காரணமாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. பல்வேறு ரயில்நிலையங்களில், தண்டவாளங்களை மறைக்கும் அளவிற்கு, மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.


மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் ரத்தானதால் குர்லா ரயில்நிலையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் உணவுப் பொட்டலங்களும், தேநீரும் வழங்கப்பட்டன. 


கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக மும்பையில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. புனே, நாசிக், தானே ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று அறிவித்திருக்கும் மும்பை வானிலை ஆய்வு மையம், பலத்த காற்று வீசும் என்றும் எச்சரித்திருக்கிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அவசர தேவைகளைத் தவிர, வேறு எந்த தேவைகளுக்காகவும், வீடுகளை விட்டு, வெளியில் செல்வதை, தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.