கேரள மக்கள் இந்தக் கடினமான நேரத்தில் இருந்து விரைவில் மீண்டுவர நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாறு காணாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்துவருகிறது. கனமழையின் காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. கனமழையின் எதிரொலியால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பலத்த மழையினால் கேரளா முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 


கனமழையால் நேற்றைய நிலவரப்படி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். கேரளாவை பொருத்த வரை இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன.


இந்நிலையில் கேரள மக்களுக்காக பிரார்த்திப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முன்பு எப்போதும் இல்லாத அளவு தற்போது கேரளாவில் கன மழை பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரளாவில் உள்ள காங்கிரஸாரும், அண்டைப் பகுதிகளில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த உதவியைக் கேரள மக்களுக்குச் செய்ய வேண்டும். 


கேரள மக்கள் இந்தக் கடினமான நேரத்தில் இருந்து விரைவில் மீண்டுவர நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.