புதுடெல்லி: இந்திய ராணுவம் இன்று நக்ரோடா பகுதியில் சீவுதல் நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது. காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு புறநகர் பகுதியான நக்ரோட்டா-வில் உள்ள ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


நேற்று காலை அந்த முகாமிற்குள் நுழையும் முயற்சியாக தீவிரவாதிகள் சிலர் போலீஸ் சீருடையில் அங்கு வந்தனர். அவர்கள் கையெறி குண்டுகளை வீசியதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளாலும் சுட்டனர். மேலும் அப்பகுதியிலிருந்த 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 16 பேரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்தும் வைத்துக் கொண்டனர்.


தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக ராணுவ வீரர்கள் உள்பட 16 பேரை பிடித்து வைத்து இருந்ததால் அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் செயல்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவரும், வீரர்கள் 5 பேரும் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளாக பிடிபட்டவர்களை ராணுவ வீரர்கள் மீட்டனர்.


ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள பல பல பாதுகாப்பு நிலைகளை தாண்டிதான் ராணுவ முகாம் வர முடியும். இதனால், தீவிரவாதிகள் எப்படி இத்தனை பாதுகாப்பு நிலைகளையும் தாண்டி உள்ளே சென்றனர் என்பது குறித்து ராணுவம் விசாரித்து வருகிறது.


தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நக்ரோட்டா நகரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததால் இதையொட்டிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்குள்ள பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. எல்லையில் 2 நாட்கள் அமைதி நிலவியதை தொடர்ந்து நேற்று இத்தாக்குதல் நடந்துள்ளது.