அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று நேற்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்... பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.


சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது , உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.கடந்த காலங்களில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய குற்றவாளிகளை இந்தியாவிடம் சவூதி அரசு ஒப்படைத்துள்ளது.



முன்னதாக பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகள் இடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும் உடன்படிக்கை செய்துக் கொண்டன. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் சவூதி அரேபியா அரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 


மத்திய வெளியுறவுத்துறை தகவலின் படி இன்று இரவு 11.30 மணியளவில் முகமது பின் சல்மான் இந்தியாவில் இருந்து விடைபெறுவார் என தெரிகிறது. முகமது பின் சல்மானின் இந்த 30 மணி நேர இந்தியா சுற்றுப்பயணத்தில் புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.