நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவபடிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.


இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு இதை ஏற்க மறுத்து விட்டது. 


இந்நிலையில் மே மாதம் 7-ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி துவங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூடுதல் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வில் பங்கேற்க முடியாது என்ற சி.பி.எஸ்.இ.யின் உத்தரவையும் ரத்து செய்தது.


தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய 8 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.