இந்தியா, சீனா படைகள் இடையே தொடர்பு மேம்படுத்த முடிவு....!
இந்தியா, சீனா பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பு - எதிர்கால பிரச்சனைகளுக்கு டோக்லாமை போன்று தீர்வு காண முடிவு..!
இந்தியா, சீனா பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பு - எதிர்கால பிரச்சனைகளுக்கு டோக்லாமை போன்று தீர்வு காண முடிவு..!
சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் வேய் ஃபெங்ஹே ராணுவ அதிகாரிகள் உள்பட 24 அதிகாரிகள் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த 21 ஆம் தேதி இந்தியா வந்தனர். இந்நிலையில், வேய் ஃபெங்ஹே பாதுகப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், டோக்லாம் விவகாரம் மற்றும் இதர எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், டோக்லாம் பிரச்சனையின் போது இருநாட்டு ராணுவமும் எல்லையில் 73 நாட்கள் மோதல் போக்குடன் நிலைகொண்டிருந்தாலும், இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் பிரச்சனையை முதிர்ச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் எதிர்க்கொண்டது குறித்த நேர்மறையான கருத்துக்களை நிர்மலா சீதாராமனும், வேய் ஃபெங்ஹேவும் பகிர்ந்துகொண்டனர்.
வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சீனாவின் இறையான்மைக்கு எதிராக விளங்குவதாக பேச்சுவார்த்தையில் சீன தரப்பு தெரிவித்தது. அதற்க்கு நிர்மலா சீதாராமன், எல்லைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பு, நீர்பாசன விரிவாக்கம், தொலைத்தொடர்ப்பு மற்றும் சாலை அமைத்தல் போன்றவைகளை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டங்கள் எந்த நாட்டிற்கும் எதிராக அமையாது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த வேய் ஃபெங்ஹே, இந்த விவகாரங்களை எல்லையில் உள்ள இந்தோ - சீனோ கூட்டுப்படைகள் மட்டத்தில் பேசி அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள் என கூறினார்.
மேலும், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியின் வழியாக சீனாவின் பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து இந்தியாவின் அதிருப்தியையும் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார்.