டெல்லி என்சிஆர்: ஆப்ரிக்க பெண் மீது தாக்குதல்
நொய்டாவில் மேலும் ஒரு ஆப்ரிக்க பெண் வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியின் புறநகர்ப்பகுதியான நொய்டாவில் ஆப்ரிக்கர்களை அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திவருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி நள்ளிரவு நைஜீரிய மாணவர்கள் நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் காரில் சென்றபோது, திடீரென வன்முறையாளர்கள் அவர்களை வழிமறித்து சராமரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த ஆப்ரிக்க பெண் ஒருவரை திடீரென வன்முறையாளர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். ஆட்டோவில் இருந்து அவரை கீழே தள்ளி சராமரியாக தாக்கிவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோடிவிட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தொடரும் வன்முறை சம்பவங்களால், டெல்லி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் ஆப்ரிக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தாக்குதல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.