டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ-வின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.


மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு கடந்த ஆண்டு 2017 மே மாதம் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பளித்தது.


ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் மனுக்களை மறு சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மாதிரி காட்டுமிராண்டிதனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனையை வழங்கப்பட்டு உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு வழக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனைஉறுதி செய்வதுடன், இவர்களின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீரர்பு வழங்கியது.