கடந்த ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை: நிர்மலா சீதாராமன்
1964 முதல் 2008 வரை இலங்கை தமிழர்களுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தானில் இருந்து வந்த 2838 பேருக்கு கடந்த 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் “கடந்த 6 ஆண்டுகளில் 2838 பாகிஸ்தான் அகதிகளுக்கும், 914 ஆப்கானியர்கள், 172 பங்களாதேஷி அகதிகள் என முஸ்லிம்கள் உட்பட பலருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 1964 முதல் 2008 வரை இலங்கை தமிழர்களுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என்றார்.
நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், "2014 வாக்கில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 566 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. 2016 முதல் 2018 வரை மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுமார் 1595 பாகிஸ்தான் வெளிநாட்டவர்களுக்கும் 391 ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இந்த காலகட்டத்தில் தான் பாடகரான அட்னான் சாமிக்கு (Adnan Sami) இந்திய குடியுரிமையும் வழங்கப்பட்டது. இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும் எனவும் கூறினார்.
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இப்போது பங்களாதேஷ்) வந்த மக்கள் நாட்டின் வெவ்வேறு முகாம்களில் குடியேறியதாகவும், அவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள், அவர்கள் 50 முதல் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் இந்த முகாம்களுக்குச் சென்றால், உங்கள் இதயம் அதிர்ச்சி அடையும். அதேபோல முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நிலைமையும் இதுதான். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக கிடைப்பதில்லை.
மத்திய அரசாங்கம் எந்தவொருவரின் குடியுரிமையையும் பறிக்கவில்லை என்பதை வலியுறுத்திய சீதாராமன், "குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் முயற்சியாகும். நாங்கள் குடியுரிமையை பறிக்கவில்லை, சிலருக்கு குடியுரிமையை மட்டுமே தருகிறோம்." என்றார்.
நிதியமைச்சர் மேலும் கூறுகையில், "தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர் - NPR) ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படும். அதற்கும் தேசிய குடிமக்களின் பதிவிற்கும் (என்.ஆர்.சி - NRC) எந்த தொடர்பும் இல்லை. சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி எந்த அடிப்படையும் இல்லாமல் மக்களை தூண்டுகிறார்கள் என கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.