29 முதல் தலைகவசம் இல்லையா... பெட்ரோல் இல்லை: காவல்துறை எச்சரிக்கை
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
குல்பர்கா: கல்புர்கி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் புதிய வாகன விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதில் விதியை மீறுபவர்களுக்கு அபராதம் பல மடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அன்று முதல் ஊடங்களில் பெரும்பாலான செய்திகள் அபராதம் குறித்தே இருந்தது. வாகன விபத்து மூலம் ஆண்டுதோறும் உயிர் பலி அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் வாகன விதிகளை பின்பற்றுவதில்லை. உயிர் பலியை தடுக்கவும், அனைவரும் வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய வாகனம் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனாலும் இன்னும் பலர் விதிக்கு புறம்பாக வாகனங்களை ஓட்டி செல்வது என்பது வேதனைக்குறிய விசியம் ஆகும்.
"தலைகவசம் உயிர் கவசம்" என்று ஹெல்மெட் பற்றிய முக்கியத்துவத்தை பல விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்புர்கி மாவட்டத்தில் காவல்துறை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதாவது மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைகவசம் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது என மாவட்ட காவல்துறை பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வரும் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்படும். அதற்கு முன்பு தலைகவசம் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் பிரசாரங்கள் நடத்தப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.