பிப்,.1 முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கம்
பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடுகள் விலக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலனா மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஏ.டி.எம்.,களில் முதலில் ஒரு நாளைக்கு ரூ 2,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.2,500-ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாதம் ஜனவரி 1ம் தேதி முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.
ஆனால் ஜனவரி 16-ம் தேதி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் வரம்பை ரூ. 10,000-ஆக உயர்த்தியது ரிசர்வங்கி. அதே நேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ரூ 24,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடித்தது. அது போல் நடப்பு கணக்கில் இருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 என இருந்ததை ரூ. 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டது.
வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் வங்கியில் நடப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. ஆனால் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை ஒவ்வொரு வங்கியும் தாங்களே விதித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.