அந்தமான் - நிகோபார் தீவுகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி ஓட்டுச்சாவடியில் ஒரு ஓட்டுக் கூட பதிவாகவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள சோம்பன் ஹட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் நாள் அன்று ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. 


அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இன்னும் கற்கால வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது 2 பேர் மட்டுமே வாக்களித்தனர். அப்பகுதி மக்கள் முதன் முறையாக வாக்களித்தது அப்போது தான்.


இது குறித்து அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கான தலைமை தேர்தல் அதிகாரி கே.ஆர்.மீனா தெரிவிக்கையில்,. 66 தேர்தல் பணியாளர்களை கொண்ட 2 ஓட்டுச்சாவடிகளை அப்பகுதியில் அமைத்திருந்தோம். சோம்பன் ஹட் பகுதியில் 22 வாக்காளர்கள் உள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஓட்டளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் அமைத்திருந்தோம். இருந்தும் இந்த ஆண்டு ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. 


இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் காட்டின் உட்பகுதியில் வசிப்பதால் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதாவது தான் ரேசன் பொருட்களை வாங்க வெளியே வருகிறார்கள்.


இந்த மக்களை தேடிச் சென்று, தேர்தல் நடைபெற உள்ள தகவலை தெரிவித்தோம். ஏப்ரல் 11-ஆம் நாள் அன்று தேர்தல் நடைபெறுவதையும் அவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் தெரிவித்தோம், இருந்தும் யாரும் வரவில்லை. 


உள்ளூர் கிராம வாசிகளை தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை, பல நடவடிக்கைகள் எடுத்தும் யாரும் வர விரும்பவில்லை. அந்த மக்கள் இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளதால் அரசியல் கட்சிகள் யாரும் அங்கு செல்லவில்லை. அதனால் அவர்களை எங்களால் கட்டாயபடுத்த முடியவில்லை என தெரிவித்தார்.