ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தடுக்க முடியாது - பிரதமர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
உத்திரபிரதேச மாநில வளர்ச்சி மிக முக்கியமானது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக இல்லாத 14 ஆண்டு காலத்தில் வளர்ச்சியும் இல்லாமல் போய்விட்டது. மாநில வளர்ச்சிக்கு ஓட்டு போடுங்கள். ஜாதி, மத அடிப்படையில் ஓட்டு போட வேண்டாம். உத்தர பிரதேச மக்களை பாரதீய ஜனதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
இங்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும். உத்திரபிரதேச மாநிலம் வளர்ச்சியும் அடையும் எனக்கூறினார்.
மேலும் உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் மீட்கும் ஒரே கட்சி பாஜக தான். எதிரும் புதிருமான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதிக் கட்சியும் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்துக்கொள்கின்றன. இவர்கள் என்னை வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றனர்.
மத்திய அரசு சமாஜவாதிக் கட்சிக்கு முழு ஆதரவு அளித்த போதும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தவதற்கு நேரமில்லாமல் இருக்கிறது. நான் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என கூறினார்.