உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு வீடுகளுக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு இல்லங்களில் குடியேறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மின் சாதனப் பொருள்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அரசு இல்லங்களில் குடியேறும் போது வீட்டு உபயோகப் பொருள்களும், மின்சாதனப் பொருள்களும் வாடகையின்றி வழங்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆணையை, மத்தியப் பொதுப்பணித்துறை இயக்குநர் பிரபாகர் சிங்குக்கு, மத்திய குடியிருப்பு இயக்குநரகம் அண்மையில் அனுப்பி வைத்துள்ளது. 


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அவருக்கான அரசு இல்லத்தில் குடியேரும்போது பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு, இதற்கு முன்பிருந்த விதிமுறைகளின்படி 5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு 4 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 


தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்வதற்கான ஒதுக்கீடு 8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 4 லட்சமாக வழங்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பைக் காட்டிலும் கூடுதல் மதிப்புக்கு வாங்கப்படும் பொருள்களுக்கு வாடகை வசூலிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.