பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண்ஜேட்லி பதிவிட்டுள்ளார். பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே பணமதிப்பிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கி முறையை புறந்தள்ளி, அடையாளம் தெரியாத வகையில் பணப்பரிவர்த்தனை நடைபெறும்போது, அது வரி ஏய்ப்புக்கு வித்திடுவதாக அவர் கூறியுள்ளார்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரொக்க கையிருப்பு வைத்திருந்தவர்கள் அதை வங்கியில் போடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம், 17.42 லட்சம் கணக்குகள் குறித்து சந்தேகம் எழுந்து, ஆன்லைன் மூலம் விளக்கம் பெறப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதில், சட்டமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பெருந்தொகைகள் வங்கியில் போடப்பட்டதால், வங்கிகளின் கடன் அளிக்கும் திறன் மேம்பட்டதாகவும், முதலீடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு முறையான பொருளாதாரத்தின் ஒருபகுதியாக மாறியதாகவும் அருண்ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரொக்கம் மொத்தமும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டது என்பதை  வைத்து விமர்சனங்கள் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமாக இருக்கவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மாறாக அந்த பணத்தை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டுவருவதும், அந்த பணத்தை வைத்திருந்தவர்களை வரி செலுத்தச் செய்வதுமே விரிவான நோக்கமாக இருந்தது எனவும் அவர் விளக்கியுள்ளார்.



ரொக்கப் பணப் பரிவர்த்தனை முறையில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இந்தியாவை மாற்ற, ஒட்டுமொத்த முறையையும் ஒரு உலுக்கு உலுக்க வேண்டியிருந்தது எனவும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால், வரி வருவாய் மற்றும் வரி செலுத்துவோர் அளவு அதிகரித்ததாகவும் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.