குடியரசுத் தலைவர் தேர்தல் : யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் கடந்த 24-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிசி மோடியிடம் யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுக்களை வழங்கினார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல் : திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்
மேலும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஆர்எல்டியின் ஜெயந்த் சின்ஹா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக சார்பில் ஆ. ராசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உடன் இருந்தனர்.
கடைசி நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமா ராவ் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது உடன் இருந்தார். முன்னதாக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கலந்துகொள்ளவில்லை.
இருப்பினும், இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை வேட்புமனு தாக்கலுக்கு அனுப்பவில்லை. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு எதிராக வாக்களிக்க இயலாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக செயல்பட மாட்டேன் எனவும், அரசியலமைப்பின் படி நடந்துகொள்ளும் குடியரசுத் தலைவராக இருப்பேன் எனவும் யஷ்வந்த் சின்ஹா கூறினார். திரௌபதி முர்முவுடன் தனக்கு தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றாலும், இது "இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போர்" எனவும் அவர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மட்டும் 49% வாக்குகள் உள்ள நிலையில், பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனினும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து செயல்படும் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | திரௌபதி முர்முவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR