ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ராம் கிஷன் கிரேவால் இன்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்தார். தற்போது டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் ராம் கிஷனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியதாவது: .ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷனின் தற்கொலை மூலம் ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பொய் பிரசாரமும், கையாலாகத்தனமும் வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருக்கும் ராம் கிஷன் கிரேவாலின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரை சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த தடையைமீறி ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதேபோல் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மற்றும் சில ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களையும் டெல்லி போலீசார் தடுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.


இதுதொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் கூறியதாவது:- போராட்டங்களை நடத்துவதற்கு மருத்துவமனை உகந்த இடமல்ல. இங்கு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு போராட்டம் நடத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கடமைக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.