மும்பையில் பெய்துவரும் கனமழையால் மக்களும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்புநிலை திரும்பியிருந்த நிலையில், மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின.


மாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோரேகான், அந்தேரி, பாந்த்ரா, சயான், மாடுங்கா போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.



வடாலா, தாதர், குர்லா, செம்பூர், நவிமும்பை உள்ளிட்ட இடங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. சயான்-பான்வெல் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரயில்நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.


கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் தாமதமாக வந்து சென்றன. தொடர்ந்து மழை பெய்ததால் 17 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.


இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பால்கர், தானே, மும்பை, ரெய்காட். ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையோ அல்லது மிகக் கனமழையோ பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.