பாகிஸ்தானில் மற்றொரு இந்தியர் கைது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், போதிய பயண ஆவணங்கள் இல்லை எனக் கூறி சாலையில் நடந்து சென்ற இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த செயிக் நபி அகமது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைதல் மற்றும் வசித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்தியர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்திய தூதரகம் உறுதி செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த குலபூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.