LOC ஒட்டியுள்ள பாகிஸ்தான் ஏவுதளங்களில் பயங்கரவாதிகளுக்கு இடம்: இந்திய ராணுவம்
பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு நாளும் தீவரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜம்மு-காஷ்மீரின் எல்லைகோடு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் காரணமாக பாகிஸ்தானின் முயற்ச்சி வெற்றி பெற முடியவில்லை. பாகிஸ்தானில் இருந்து தீவரவாதிகள் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
வடக்கு இராணுவத்தின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை டி.ஜி.யுமான லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான், ஸ்ரீநகரில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு நாளும் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் லஷ்கருடன் தொடர்புடையவர்கள் என்று கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில், பயங்கரவாதிகளின் வாக்குமூலத்தின் வீடியோவையும் காட்டினார். இந்த வீடியோவில் பயங்கரவாதிகள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்துவது, எப்படி நடத்துவது குறித்து கூறி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஏவுதளங்களிலும் ஏராளமான பயங்கரவாதிகள் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.