காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

87 இடங்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றின.


ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பாஜக ஆதரவுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும், பாஜக தரப்பில் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். 


பின்னர் ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பாஜக MLA-க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பாஜக தலைவர் அழைப்பு விடுத்தார். பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது.


தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் வரும் மக்களவை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வரும் மக்களவை தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் களமிறங்கவுள்ளார்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.