வாஜ்பாயின் அஸ்தியை வரும் 26 ஆம் தேதி பௌர்ணமி அன்று கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆகஸ்ட்., 16 ஆம் நாள் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.


வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 


இதையடுத்து, அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் வாஜ்பாயின் அஸ்தியை கடந்த 19 ஆம் தேதி கரைத்தனர். 
 
இதை தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை வழங்கும் நிகழ்வு இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்கினர். 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேச தலைவர்களும் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பகுதியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது. 



வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கவும், அங்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக BJP தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி சென்றுள்ள அவர் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக்கொண்டார். 


தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி பா.ஜ.க மூத்த தலைவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு பவானி ஆகிய 6 இடங்களில் கரைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் முன்னாள் எம்.பி. இல.கணேசன், ராமேஸ்வரத்தில் எச்.ராஜா, ஈரோட்டில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரையில் கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோரும் தலைமை தங்குகின்றனர். 


சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில், அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கரைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுநாள் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்படுகிறது.