பினாமி சொத்து சட்டம் கடுமையாகும்: மோடி எச்சரிக்கை
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து வரவுள்ள பினாமி சொத்து ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
புதுடெல்லி: உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து வரவுள்ள பினாமி சொத்து ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பினாமி பெயர்களில் வாங்கி குவிக்கப்படும் சொத்துகள் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்பதை இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பினாமி சொத்து சட்டம் 1988-ம் ஆண்டு அமலுக்கு வந்தபோதும், அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை, அதற்கான அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை, அது ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடந்தது என மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் அந்த சட்டத்தை எடுத்து சீரமைத்திருக்கிறோம். பினாமி சொத்துகளுக்கு எதிரான கூர்மையான சட்டமாக மாற்றி இருக்கிறோம். வரும் நாட்களில் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன.
அரசியல் கட்சிகள் எல்லாவிதமான சலுகைகளையும் அனுபவிக்கின்றன என சிலர் வதந்தி பரப்புகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் 2 பரிசுத்திட்டங்களை அறிவித்தார்.
இதில் "லக்கி கிரஹாக் யோஜனா" பொது மக்களுக்கானது. மற்றும் "டிகிதன் வியாபார் யோஜனா" வியாபாரிகளுக்கானது.
டிஜிட்டல் மூலம் பொருட்களை வாங்குகிற பொது மக்களுக்கு தினந்தோறும் குலுக்கல் நடத்தி 15000 பேருக்கு தலா ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார்.