99% பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% கீழ் கொண்டுவரப்படும்: பிரதமர் மோடி
பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இன்னும் எளிதாக்கப்பட உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2017 ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி., அமைப்பு அவ்வப்போது கூடி விரிவிகிதங்கள் மற்றும் விதிமுறைகளை சீரமைத்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இன்று மும்பையில் குடியரசு மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: ஜி.எஸ்.டி அமைப்பு நாட்டில் ஒரு பெரிய அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது, 99 சதவிகிதம் பொருட்கள் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முடிந்தவரை ஜி.எஸ்.டி. வரி எளிமையானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்கிறோம்.
ஜி.எஸ்.டி வரி மூலம் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியை செயல்படுத்தியது மூலம் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி உள்ளது. நிறுவனங்கள் வரி செலுத்தில் உண்மைத்தன்மை ஏற்ப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி-க்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி அமுல் செய்த பின்னர் அது மேலும் 55 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி அமைப்பின் செயல்திறன் மேம்பட்டு வருகிறது எனக் கூறினார்.