ஒடிசா மாநிலத்தை சூறையாடிய ஃபானி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று பிரதமர் மோடி பார்வையிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி வெள்ளிக்கிழமை காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலத்தை கடந்தது. 


இதில், சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வுகள் மிகச்சரியாக கணிக்கப்பட்டு, அது கரையை கடக்கும் பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்தபோது, பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டது. இந்த புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 34 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் அவை, தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் ஒடிசாவில் புயலால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார். இன்று காலை அவர் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் வந்தடைந்து புவனேஷ்வரில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். புயலால் உருக்குலைந்த இடங்களை பார்த்து ஆய்வு செய்தார்.