மனித சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், விஞ்ஞான பாரதி அமைப்பும் இணைந்து நடத்தும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்தியாவின் ஐந்தாவது சர்வதேச அறிவியல் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.


இதையொட்டி நடந்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி; இந்தியா பல சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். நமது வரலாறு நம்மை பெருமைக்கொள்ள செய்கிறது என்றும் நிகழ்காலம் பெரும்பாலும் அறிவியலை சார்ந்து உள்ளதாகவும் எதிர்காலத்தின் மீதான பொறுப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 திட்டத்துக்காக நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும் திட்டம் வெற்றி பெற்றது. நீங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் பட்டியலில் இது பெரிய உயரத்தை அடைந்திருப்பதை காணமுடியும். அறிவியல் ஆராய்ச்சிகள் நூடுல்ஸ் தயாரிப்பது போலவோ, உடனடி பீட்சா வாங்குவது போலவோ இல்லை. அதற்கு மிகவும் பொறுமை அவசியம். இதுபோன்ற ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்கும். இந்த திட்டம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அறிவியலில் தோல்வி என்பது இல்லை.


குறிப்பாக மனித சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கண்டுபிடிப்பு, புதுமை ஆகிய இரண்டிற்கும் அரசு தனது ஆதரவை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையாக சூழல் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.