சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதாவது... இந்தியாவின் தலைசிறந்த சோசலிசத் தலைவர்களில் ஒருவரும், எனது நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.


இந்திய அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராளித் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆவார். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தொழிற்சங்கவாதியாக உருவெடுத்த  பெர்னாண்டஸ் அப்போதைய மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்தபடியே அவர் நடத்திய சாகசங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.


தொடர்வண்டிகளை கடத்த முயன்றதாகவும், தொடர்வண்டிப்பாதைகளை தகர்ப்பதற்காக வெடிமருந்து  கடத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தொடர்வண்டித்துறை அமைச்சராகவும், தொழில்துறைக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர் என்று விமர்சிக்கப்பட்ட அவர் பின்னாளில் தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்றது வரலாறு ஆகும். பலமுறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பெர்னாண்டஸ், மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தமது ஆடைகளைக் கூட தாமே துவைத்துக் கொள்ளும் அளவுக்கு மிகவும் எளிமையானவர்.


மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் ஆவார். தில்லிக்கு நான் செல்லும் போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம். அவர் சென்னைக்கு வந்தாலும் என்னை சந்திப்பது வழக்கமாகும். 1992&ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் பெர்னாண்டசை மிகவும் கவர்ந்திருந்ததால் என் மீதும், பா.ம.க. மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.


ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு சோசலிசக் கொள்கைகளுக்கும், சோசலிச அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்