திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். 



கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 



---துறையூர் துயரம்---


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முடிந்த மூன்றாவது நாளில் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி இங்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் சில்லரைக் காசுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.


இந்தக் காசை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்தையம்பாளையம் வருகை தருவர்.


இந்நிலையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி பிடிக்காசினை கோவில் பூசாரி பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது, அதை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.


பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதில் கீழே விழுந்து பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்