ரயில்வே துறையில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு
ரயில்வே துறையில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது!
ரயில்வே துறையில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது!
‘கட்டாய ஓய்வு’ என்ற பெயரில் ரயில்வே ஊழியர்கள் 3 லட்சம் பேரை ஆள்குறைப்பு செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் ரயில்வே ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும், ரயில்வே ஊழியர்களில் 55 வயது கடந்தவர்களையும், 30 வருட பணி முடித்தவர்களையும் அடையாளம் காணுமாறு கடிதம் அனுப்பப்பட்டது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை, வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், ஆள்குறைப்பு நடவடிக்கை என வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டுவரை, ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 262 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 637 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 60 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுதொடர்பான இதர பணிகள் 2 மாதங்களில் முடிவடையும்.
மேலும், ரெயில்வே ஊழியர்களில் 55 வயதை கடந்தவர்களையும், 30 வருடம் பணி முடித்தவர்களையும் அடையாளம் காணுமாறு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும், ரெயில்வே உற்பத்தி கூடங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பணிநடத்தை விதிகளின்படி, ரெயில்வே ஊழியர்களின் பணித்திறனை வழக்கம்போல் ஆய்வு செய்து வருமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் வழக்கமான நடவடிக்கை தான்" என தெரிவித்துள்ளது.