இந்தியர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: மத்திய அரசு
உலக அளவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், இந்திய தேசியக் கொடியை கொண்ட கால் மிதியடிகளை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்தது.
புதுடெல்லி: உலக அளவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், இந்திய தேசியக் கொடியை கொண்ட கால் மிதியடிகளை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான புகைப்படங்களைப் பொதுமக்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுஷ்மா:-
அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் அனைத்துப் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் விசாக்களும் ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, மன்னிப்பு கோரியதோடு அமேசான் நிறுவனம் மூவர்ணம் கொண்ட மிதியடிகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா கந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் வலியுறுத்துமாறு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அப்போது மூன்றாம் தர விற்பனையாளராக மதிப்பு வழங்கி வரும் நிலையில் இந்தியாவின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
காலணி விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இருந்து நேரடியான கருத்து எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக அமேசான் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.