ராபர்ட் வத்ரா நில பேரத்தில் முறைகேடு
ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சியின் போது, ராபர்ட் வாத்ரா நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களுக்கு குர்கான் சில இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ., இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வாத்ரா கூறினார். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்என் திங்ரா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்தது.
இதன் பின்னர் திங்ரா கூறுகையில்:- இந்த அறிக்கையில், முறைகேடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளேன். இதில் முறைகேடு இல்லை என்றால் ஒரே வார்த்தையில் முடித்திருப்பேன். 182 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த அறிக்கையில் என்ன உள்ளது எனக்கூற மாட்டேன். ஆனால், இந்த அறிக்கையை இரண்டு பாகங்களாக தாக்கல் செய்துள்ளேன்.
முதல் பாகத்தில் முறைகேடு மற்றும் ஒப்பந்தம் தொடர்பாகவும், இரண்டாவது பாகத்தில் ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ளேன். இந்த முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் தனி நபர்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன் எனக்கூறினார்.