சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்புக்கு தடை விதிக்ககோரியும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் மற்றும் இந்து அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களையும் ஒரே வழக்காக விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும். தற்போது சபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி சபரிமலை ஐயப்பனை தரிசித்து தான் செல்லுவோம் எனக் கூறி கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். அதேபோல என்ன நடந்தாலும் சபரிமலை கோவிலுக்கு தான் செல்வேன் என பெண்ணியவாதி திருப்தி தேசாய் நேற்று அதிகாலை 4.4௦ மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். ஆனால் விமான நிலையத்துக்கு வெளியே திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக்கூறி ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். இதனால் திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்டார். தனது உயிர்க்கு ஆபத்து இருபதாக கூறி திரும்பி புனே சென்றார் திருப்பதி தேசாய்.


இதற்கிடையே, இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவி கே.பி.சசிகலா (56) நேற்று இரவு சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் இரவு நேரம் என்பதால் பாதுகாப்பை கருதி அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சசிகலா அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரபப்பு ஏற்ப்பட்டது. வேற வழியில்லாமல் போலீசார் சசிகலாவை கைது செய்தனர். 


இந்த கைது எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை கர்ம சமிதி அமைப்பு இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கேரளாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.