பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரின் உதவியாளருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.


கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தானைச் சேர்ந்த மெளலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கீர் ஆகியோரின் உறுதுணையுடன் அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான ஜோத்பூரைச் சேர்ந்த சோஹிப் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். 


இதற்கிடையே, வெளியுறவுச் சட்ட விதிகளின்படி, மெஹமூத் அக்தர் தூதரக அதிகாரிக்கான சிறப்புச்சலுகை பெற்று இருந்ததால்,  பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.


இந்த நிலையில், இந்த உளவு மோசடியில் தொடர்பு வைத்திருந்த பர்ஹத் என்பரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்ஹத், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நியமன எம்.பியான முனாபர் சலீமின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றி வருகிறார். ராஜ்ய சபா எம்.பியின் உதவியாளருக்கு உளவு பார்த்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளத சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பர்ஹத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.