குஜராத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான, 597 அடி உயரமுடைய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் நர்மதா நதியின் கரையோரத்தில், சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயரமான சிலை சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது, உலகில் உள்ள சிலைகளில் இதுவே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. சாதாரண மனிதனின் உயரத்தை விட நூறு மடங்கு அதிகமான உயரம் என்றும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரமுடையது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்பைக் கொண்டு வந்து "இரும்பு மனிதர்" பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


கடந்த 2013 ஆம் ஆண்டில் தாமே அடிக்கல் நாட்டிய இந்த சிலையை இன்று பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன் அருகே வால் ஆஃப் யூனிட்டி எனப்படும் ஒற்றுமையின் சுவரையும் பிரதமர் திறந்து வைக்கிறார். அப்போது விமானப்படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஹெலிகாப்டரில் இருந்து சிலை மீது பூமழை பொழியச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நேற்றிரவு லேசர் மின் ஒளி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு படையினரின் இசை நிகழ்ச்சியுடன், ஒடிசா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் திறப்புவிழாவில் இடம்பெறுகின்றன. அதற்காக ஏற்கனவே ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு மூலம் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.



இதனிடையே ஒடிசா மாநிலம் பூரியில் கடற்கரை மணலில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் சிலையை மணல் சிற்பமாக வடித்துள்ள மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் உலகின் மிகப்பெரிய சர்தார் சிலையை வடித்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.