ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்... வைரலான வீடியோவால் சூடுபிடித்த அரசியல் களம்!
Latest National News: ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் இணைந்து லத்தியால் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Viral Video Latest National News: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் நரசராவ்பேட்டை நகரில் ஸ்ரீ சுப்பராய மற்றும் நாராயண கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் சீனியர் மாணவர்கள் தங்களின் ஜூனியர்களை ராகிங் செய்து சித்ரவதை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகிங் என்ற பெயரில் ஜூனியர் வீரர்கள் சீனியர்கள் தாக்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைத்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து போலீசாரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடியோவில் சித்ரவதையில் ஈடுபட்ட 6 பேரை அடையாளம் கண்டனர். மேலும், இதில் ஒருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவான மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வைரலான வீடியோ
அந்த வீடியோவில் 6 ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் லத்தியை கொண்டு தாக்குவதை வீடியோவில் காண முடிகிறது. ஜூனியர்களை நான்கு பேர் சேர்ந்து ஒவ்வொருத்தராக லத்தியில் அடிக்கின்றனர். ஜூனியர் மாணவர்கள் வலியால் கதறுகின்றனர். ஜூனியர்களை ஒவ்வொருத்தராக அழைத்து கீழே பார்த்து படுக்கும்படி கூறுகின்றனர். அங்கு தலையணையில் முகத்தை வைத்து படுக்கும் ஜூனியர்களின் பின்புறம் லத்தியை வைத்திருக்கும் நான்கு பேர் ஒரே நேரத்தில் பலமாக தாக்குகின்றதை வீடியோவில் பார்க்க முடிகிறது. கல்லூரியின் ஹாஸ்டல் ரூமில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
மேலும் படிக்க | நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
இந்த சம்பவத்தில் இரண்டு ஜூனியர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்சிசி பயிற்சிக்காக அவர்கள் அந்த அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்திருப்பதாகவும் சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் தற்போதுதான் அந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகியிருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களும் புகார் அளிக்கவில்லை. இதனால், உள்ளூர் காவல்துறையினர், கல்லூரியில் வேறு எந்த மாணவர்களும் இதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இதில் ஒருவர் கைதாகி, ராகிங் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் கட்சி
இந்நிலையில், இந்த சம்பவம் சீனியர் - ஜூனியர் பிரச்னையை தாண்டி ஆந்திராவில் பெரிய அரசியல் விவகாரமாக தற்போது உருவெடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதன் X தளத்தில் தற்போதைய உள்துறை அமைச்சர் அனிதா வங்கல்புடியை குறிப்பிட்டு,"இதுதான் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை" என இந்த வைரலான வீடியோவை பதிவிட்டு தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு அமைச்சர் அனிதா தக்க பதிலடி கொடுத்தார்.
அதாவது, இந்த சம்பவம் ஒய்எஸ்ஐர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது நடந்தது என்றார். கடந்த ஜூன் மாதம்தான் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்தது பிப்ரவரி மாதத்தில் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து அமைச்சர் அனிதா,"பொய்களை பரப்புவதை ஒய்எஸ்ஆர் கட்சி நிறுத்திக்கொள்வது நல்லது.
உங்கள் ஆட்சியில் நடந்த கொடுமையை எங்கள் ஆட்சியில் நடந்ததாக பழிப்போடுவது சரியாகாது. நாங்கள் மோசமடைந்த சட்ட ஒழுங்கை தற்போது சீராக்கி வருகிறோம். பொய் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தற்போது கைது செய்யப்பட்டவர் மீது SC/ST சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அறிவிப்புகள் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ