ஷாஹீன் பாக் CAA எதிர்ப்பு காரணமாக 69 நாட்களாக மூடப்பட்ட நொய்டா-ஃபரிதாபாத் சாலை மீண்டும் திறக்கப்படுகிறது
கடந்த 69 நாட்களாக தடைசெய்யப்பட்ட ஃபரிதாபாத்தை நொய்டாவுடன் இணைக்கும் சாலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறக்கப்பட்டது.
புது டெல்லி: தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் (Shaheen Bagh) நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (Citizenship Amendment Act) எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து கடந்த 69 நாட்களாக தடைசெய்யப்பட்ட ஃபரிதாபாத்தை நொய்டாவுடன் இணைக்கும் சாலை (Noida-Faridabad Road) இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறக்கப்பட்டது. இருப்பினும், நொய்டாவை டெல்லியுடன் (Noida-Delhi Road) இணைக்கும் சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.
CAA எதிர்ப்பு போராட்டம் காரணமாக இரண்டு சாலைகளும் மூடப்பட்டதால், அனைத்து வாகனங்களும் டெல்லி ஆசிரமம் வழியாக செல்ல வேண்டியிருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். ஃபரிதாபாத்-நொய்டா சாலை திறக்கப்பட்டதால் போக்குவரத்து நேரசல் ஓரளவுக்கு குறைக்க வாய்ப்புள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பொழுது தாங்கள் எதிர்க்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை தங்கள் எதிர்ப்பு இடத்தை மாற்றமாட்டோம் என்றும், ஆனால் சாலை வழிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். அந்த வகையில் இன்று காலை ஃபரிதாபாத்தை நொய்டாவுடன் இணைக்கும் சாலை திறக்கப்பட்டது.
ஷாஹீன் பாக் நகரில் ஆர்ப்பாட்டங்கள் டிசம்பர் 15, 2019 அன்று டெல்லியை நொய்டாவுடன் இணைக்கும் சாலை 13 ஏவில் தொடங்கியது. இதனால் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் மாற்று வழிகளில் செல்ல வாகனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது நொய்டா, டெல்லி மற்றும் ஃபரிதாபாத் இடையே பயணிக்கும் பயணிகளுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.