Sitaram Yechury Indira Gandhi Historical Photo: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப். 12) காலமானார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஆக. 19ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 20 நாள்களுக்கு மேலாகவும் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 3.05 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கிற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது உடல் அவரது குடும்பம், தானம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி சீமா சிஷ்டி மூத்த பத்திரிகையாளர் ஆவார். இவர்களுக்கு மகள் அகிலா, மகன் டானிஷ் ஆகியோர் உள்ளனர். இவர்களின் 34 வயது மகன் ஆஷிஷ் யெச்சூரி கடந்த 2021ஆம் ஆண்டில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.


சீதாராம் யெச்சூரி: மாணவ சங்கத் தலைவர்


இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவராகவும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் விளங்கிய சீதாராம் யெச்சூரியின் ஆரம்ப கால அரசியல் வாழ்வு என்பது அரசியலில் ஆழம் பார்க்க காத்திருக்கும் இளைஞர்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் வேந்தராக இருந்த இந்திரா காந்தியை, தனது தலைமையிலான கடுமையான மாணவ போராட்டத்தால் பதவி விலகச் செய்த சம்பவம் வரலாற்றச் சிறப்புமிக்க ஒன்றாகும். அதை விரிவாக இங்கு காணலாம்.


மேலும் படிக்க | Sitaram Yechury: சீதாராம் யெச்சூரி காலமானார்... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் தானம் - தலைவர்கள் இரங்கல்


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவரும் அவசரநிலையை எதிர்த்து போராடி சிறைசென்றார். சிறையில் இருந்து வந்த பிற்பாடு 1977-1978 காலகட்டங்களில் ஜவஹர்லால் நேரு மாணவர் சங்க தேர்தல்களில் நின்று மூன்று முறை தலைவராக தேர்வானார்.


பல்கலைக்கழகத்தை நடத்திய மாணவ சங்கம்


மாணவ சங்க தலைவராக இருந்தபோது இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இந்திரா காந்தி இருந்துள்ளார். இந்திரா காந்தி அந்த பதவியில் இருந்து விலகுமாறு 1977இல் சீதாராம் யெச்சூரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, துணை வேந்தராக இருந்து பி.டி. நாக் சௌத்ரி என்பவரையும் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் நுழைய விடாமல் மாணவர்கள் தடுத்தனர். இதனால், அரசு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு முடிவு செய்தது.


ஆனால், இதை எதிர்த்து மாணவர்களும், பேராசிரியர்களும் பல்கலைக்கழகம் தொடர்ந்து நடக்கும்படி பார்த்துக்கொண்டனர். நூலகம் 24 மணிநேரமும் திறந்திருந்தது. அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன, உணவு விடுதியும் கூட இயங்கியது. சுமார் 40 நாள்களுக்கு இதே நிலை அங்கு நீடித்துள்ளது. துணை வேந்தர் வேலை நிறுத்தத்தில் இருக்கிறார், பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குகிறது என்ற அறிவிப்பு பலகையை டெல்லியின் சந்தைகளிலும், முக்கிய பகுதிகளிலும் வைத்து மாணவ சங்கத்தினர் நிதி திரட்டி பல்கலைக்கழகத்தை நடத்தி உள்ளனர், இதனை சீதாராம் யெச்சூரியே ஒருமுறை நினைவுக்கூர்ந்தார்.


ராஜினாமா செய்த இந்திரா காந்தி 


தொடர்ந்து, 1977இல் அவசரநிலை முடிந்து, இந்திரா காந்தி மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பை அவர் வைத்திருந்தார். அதனை கண்டித்து இந்திரா காந்தியை அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி சுமார் 500 மாணவர்கள் அவரது இல்லத்தை முற்றுகை இட்டுள்ளனர். 


இந்த சம்பவத்தை சீதாராம் யெச்சூரி ஒருமுறை கூறுகையில்,"நாங்கள் 500 பேர் அங்கு இருந்தோம்.  இந்திரா காந்தியின் உதவியாளர் எங்களிடம் வந்து, உங்களில் 5 பேரை மட்டும் இந்திரா காந்தி சந்திக்க விரும்புகிறார் என கூறினார். ஆனால், அவரை வெளியே வரும்படி நாங்கள் கோரிக்கை வைத்தோம், அவரே கீழே வந்தார். அவருக்கு எதிரான எங்களின் தீர்மானத்தை நாங்கள் வாசித்தோம். ஆனால் அவர் அதை நிதானமாக கேட்டார். நான் அவரிடம் எங்களின் தீர்மானத்தை கொடுத்தேன், அதை அவர் பொறுமையாக பெற்றுக்கொண்டார். இரண்டு நாள்களில் அவர் ராஜினாமா செய்தார்" என்றார். 


வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம்


இந்த வரலாற்றுச் சம்பவம் தற்போது நம்மிடம் ஒரு புகைப்படமாக எஞ்சி நிற்கிறது. இந்திரா காந்தியின் இல்லத்திற்கு வெளியில் சீதாராம் யெச்சூரி மாணவர்களின் தீர்மானத்தை வாசிக்க அருகில் இந்திரா காந்தி அதனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பது அந்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தை பதிவுசெய்வதால் இந்த புகைப்படமும் வரலாற்றில் இடம்பிடித்தது எனலாம். 



பரவிய வதந்தி 


இருப்பினும், இந்த புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளங்களில் தவறான உள்ளடக்கத்தோடு வைரலானது. அதாவது, இந்திரா காந்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, அப்போது மாணவ அமைப்பின் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்திய அவரை பொறுப்பில் இருந்து விலகும்படி நிர்பந்தித்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அவை முற்றிலும் தவறானது என பின்னர் நிரூபணமானது. 


மேலும் படிக்க | பெண்கள் விடுதியில் மரண ஓலம்! அலறித்துடித்த பெண்கள்! பறிபோன உயிர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ