மோடிக்கு எதிராக போட்டியா?... வேட்புமனுவை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்...
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது!
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது!
எல்லை பாதுகாப்பு படை வீரராக பணயாற்றியவர் தேஜ் பகதுார் யாதவ். 2017-ஆம் ஆண்டு, அவர் பணியில் இருந்த போது, சீருடையுடன் ஓர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் ராணுவம், துணை ராணுவப் படையினருக்கு மிக மோசமான தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த வீடியோ பதிவு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, யாதவிடம் நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து தேஜ் பகதூர் யாதவ் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நடைபெறும் மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து தான் போட்டியிட உள்ளதாக யாதவ் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, தேஜ் பகதுார் யாதவை, தங்கள் கட்சியின் சார்பில், வாரணாசியில் களம் இறக்குவதாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அறிவித்தது, மேலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே களம் இறக்கப்பட்ட வேட்பாளர், தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவார் என்றும், அந்தக் கட்சி தலைமை அறிவித்தது.
இந்நிலையில் இன்று தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிகிறது.
தேஜ் பகதூர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சில முரண்பாடுகள் இருந்ததாக குறிப்பிட்ட வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரி, இது தொடர்பாக சில ஆவணங்களுடன் இன்று காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, தேஜ் பகதூர் தனது வழக்கறிஞர் மூலம் தேவையான ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்ததாகவும், அவற்றை பரிசீலித்த அதிகாரி தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இன்று மாலை அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்து முடிவை எதிர்து நீதிமன்ற உதவியை நாட இருப்பதாக தேஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.